அமராவதி சர்க்கரை ஆலை நவீனமயம் - முதல்வரிடம் நேரில் மனு அளிக்க முடிவு
- ஆலையில் பழமையான எந்திரங்கள் உள்ளதால் அடிக்கடி பழுது, அரவை நிறுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
- ஆலை அரவை துவங்கும் போது சர்க்கரை கட்டுமானம் 9.5 ஆக இருந்த நிலையில் தற்போது 9 ஆக குறைந்துள்ளது.
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள, கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க ஆலோசனை கூட்டம்ஆலை திருமண மண்டபத்தில் நடந்தது.தலைவர் சண்முகவேலு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முத்துச்சாமி மற்றும் பாலதண்டபாணி, வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவைக்குத்தேவையான கரும்பு வெட்டும் போது, பாரபட்சம் சிபாரிசு அடிப்படை என முறைகேடு நடக்காமல் வரிசைப்படி மட்டுமே மேற்கொள்வதோடு, பணியை வேகப்படுத்த வேண்டும். ஆலையில் பழமையான எந்திரங்கள் உள்ளதால், அடிக்கடி பழுது, அரவை நிறுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர். ஆலையை முழுமையாக நவீனப்படுத்த, தமிழக முதல்வருக்கு மனு அளிப்பது.ஆலை அரவை துவங்கும் போது சர்க்கரை கட்டுமானம் 9.5 ஆக இருந்த நிலையில் தற்போது 9 ஆக குறைந்துள்ளது. பிழிதிறனை அதிகரிக்கவும் ஆலையில் சர்க்கரை சாறு செல்லும் குழாய்கள் பழுதடைந்துள்ளதால், அதிகளவு சாறு வீணாகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ஆலையில், கரும்பு அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், வெட்டுக்கூலி நிர்ணயிப்பதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஆலோசனை பெற்று, அதிகாரிகள் நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.