உடுமலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி
- உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- முக்கிய வழித்தடங்களில் தண்ணீர் தேக்கமடைகிறது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையின்போது பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு என முக்கிய வழித்தடங்களில் தண்ணீர் தேக்கமடைகிறது. இதேபோல சில பள்ளிகளின் வளாகத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு, போதிய வடிகால் வசதி இல்லாததே காரணமாகும். சில பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல், கழிவுநீரோடு சேர்ந்து தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.குடியிருப்பு மற்றும் ரோடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்வதால் அப்பகுதிகளை கடக்க முடியாமல் மக்கள் மிகவும் அவதியடைகின்றனர்.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:- நகரின் பிரதான ரோடுகளின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் ரோட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதேபோல சில பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை அப்புறப்படுத்த உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுப்பதில்லை. மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறுகிறது.மழையால், நகரில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.