உள்ளூர் செய்திகள் (District)
கோப்பு படம்.

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் பாதிப்பு

Published On 2023-08-31 09:25 GMT   |   Update On 2023-08-31 09:25 GMT
  • சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
  • கேட்பார் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த கால்நடைகளை உள்ளாட்சி நிர்வாகமே வளர்க்கவும் செய்யலாம்.

 திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் அவ்வப்போது சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து நகர்ப்புற உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திருப்பூரை பொறுத்தவரை மாநகராட்சி பகுதி மட்டுமே முழுக்க முழுக்க நகரமாக உள்ளது. மாறாக, பூண்டி நகராட்சி, பல்லடம், வெள்ளகோவில் உள்ளிட்ட நகராட்சிகள், அவிநாசி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் கிராமப்புறங்களை ஒட்டியுள்ளன.

பேரூராட்சிகளின் வழியாக தான் அருகேயுள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்போர் அதிகம் என்ற நிலையில் அவர்கள் அங்குள்ள மேய்ச்சல் நிலம், சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அந்த சமயத்தில் சில கால்நடைகள், நகராட்சி, பேரூராட்சிக்கு சாலைக்கு வந்துவிடும்.

நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்படி சாலைகளில் திரியும் கால்நடைகளை, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் பட்டி அமைத்து அதில் அடைத்து வைக்கலாம். அதன் உரிமையாளர்கள் வந்து கேட்கும் போது அபராதம் விதிக்கலாம். கேட்பார் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த கால்நடைகளை உள்ளாட்சி நிர்வாகமே வளர்க்கவும் செய்யலாம்.

மாநகராட்சியில் மட்டுமே அதற்கான கட்டமைப்பு, கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். பெரும்பாலான நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இத்தகைய கட்டமைப்பு இல்லை.எனவே சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமிருந்தாலும், ஆள் பற்றாக்குறை, நடைமுறை சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அத்தகைய பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News