திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு
- 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர்.
- அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை சேவையை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் தேசிய மருத்துவ கவுன்சிலில் இருந்து 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர். அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் விதம், ஆய்வகம், போதுமான டாக்டர்கள் உள்ளார்களா, மருத்துவபடிப்பு மாணவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வசதிகள், சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மாலை வரை ஆய்வு செய்தார்கள். அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து டீன் முருகேசன் கூறும்போது, அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்குவார்கள். நமது கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து ஏற்கனவே தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பி விட்டோம். 5 பேர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் திருப்தியாக செய்துள்ளோம். குழு ஆய்வுக்கு பிறகு திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரம் கிடைக்கும்' என்றார்.