அரையாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி
- திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் வீதம் பயிற்சி பெறுகின்றனர்.
- உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
திருப்பூர்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நவம்பர் 3-ம் வாரத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான (நீட்) பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதற்காக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் வார நாட்களிலும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
மாவட்ட நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் வீதம் பயிற்சி பெறுகின்றனர். இதில் பிளஸ் 2ல் 50 மாணவர்களும், பிளஸ் 1ல் 20 மாணவர்களும் அடங்குவர் என்றார்.