கோரிக்கைகளை வலியுறுத்தி 14-ந்தேதி முதல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
- மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
- திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பல்லடம்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் வரவேற்றார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்வது, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, ஊத்துக்குளி, குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த அரசை கேட்டு கொள்வது.
திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பணி ஓய்வு பெற்ற மாவட்ட தலைவர் ஞானசேகரனுக்கு, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். இதில் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில மகளிரணி அமைப்பாளர் வித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட தணிக்கையாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.