உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தடகள போட்டியில் 1,521 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு

Published On 2023-02-19 07:50 GMT   |   Update On 2023-02-19 07:50 GMT
  • தனிநபருக்கு தடகள போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
  • அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கடந்த 11ந்தேதி துவங்கி ஒரு வாரமாக நடந்து வருகிறது. குழு போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் தனிநபருக்கு தடகள போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

முன்னதாக சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார்.

முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், முதல் மண்டல தலைவர் உமா மகேஷ்வரி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவினர், அரசு ஊழியர் என 4பிரிவினருக்கு ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவில் 876 பேர், கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில், 250 பேர், அரசு ஊழியர் பிரிவில் 263 பேர், பொதுப்பிரிவில் 132 பேர் என மொத்தம் 1,521 பேர் தடகள போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாவட்ட தடகள பயிற்சியாளர் திவ்யநாகேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தடகள போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

போட்டியை துவக்கி வைக்க வந்த திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மைதானத்தில் களமிறங்கி குண்டு எறியும் இடத்துக்கு வந்தார். வட்டத்துக்குள் நின்று குண்டை தோளில் வைத்து எறிந்தார். சிறிதுதூரம் சென்று குண்டு விழுந்தது. 

Tags:    

Similar News