160 பேருக்கு ரூ.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் வழங்கினார்
- பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
- ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசி:
]அவினாசி துலுக்கமுத்தூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், கிராமங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தீர்வு காண தனிக்கவனம் செலுத்த வேண்டும். கடைக்கோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்றுசேர அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், இணையவழி இ-பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தாட்கோ சார்பில் கடனுதவி, விலையில்லா சலவைப்பெட்டிகள், தையல் எந்திரங்கள் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
முகாமில் திருப்பூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வரலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், சமூக நல அதிகாரி ரஞ்சிதாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி குமாரராஜா, அவினாசி தாசில்தார் ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.