3 சிறுவர்கள் பலியான சம்பவம் - காப்பகத்தின் உரிமையை ரத்து செய்ய கலெக்டர் பரிந்துரை
- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற சிறுவர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 15 சிறுவர்கள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வந்தனர்.கடந்த 5ந் தேதி இரவு உணவு மற்றும் இனிப்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.இதில் மாதேஷ்(வயது 14), அத்தீஷ் (11), பாபு (10) ஆகிய 3 சிறுவர்கள் பலியாகினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கலெக்டர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஆய்வறிக்கை சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் கூறுகையில் ,ஆய்வின் அடிப்படையில் முதல்கட்டமாக ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் பூட்டப்பட்டது. சிறுவர் நலனை கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக சேவாலயம் நடத்தப்பட்டு வந்துள்ளது.சிறுவர்கள் தங்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. சேவாலய உரிமத்தை ரத்து செய்யுமாறு ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.