உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அனுப்பட்டி இரும்பு உருக்கு ஆலையை அகற்ற அதிரடி உத்தரவு

Published On 2023-04-30 04:35 GMT   |   Update On 2023-04-30 04:35 GMT
  • நகர ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறாமல், இரும்பு உருக்கு ஆலை ஊராட்சி பகுதியில் இயங்கி வந்துள்ளது.
  • தவறும் பட்சத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர்:

பல்லடம் அடுத்த அனுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக, அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆலையின் எந்திர இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில், நிரந்தரமாக மூட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். இச்சூழலில், நான்கு வாரத்துக்குள் ஆலையை அகற்றிக் கொள்ளுமாறு ஊராட்சி நிர்வாகம் உருக்கு ஆலைக்கு உத்தரவிட்டுள்ளது.

அனுப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், தனியார் இரும்பு உருக்கு ஆலை நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள உத்தரவு கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நகர ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறாமல், இரும்பு உருக்கு ஆலை ஊராட்சி பகுதியில் இயங்கி வந்துள்ளது.ஊராட்சி சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவித விளக்கமும் அளிக்காமல், சம்பந்தம் இல்லாத பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற ஊரமைப்பு துறை மற்றும் ஊராட்சி சார்பில் கட்டுமானம் செய்வதற்காக வழங்கப்பட்ட உத்தரவு நகல்கள் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு தெரியப்படுத்தியும் எந்தவித ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

எந்தவித அனுமதியும் பெறாமல் ஆலை இயங்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு ஊராட்சி கட்டட விதிகளின்படி, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆலையை நான்கு வாரத்துக்குள் சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் எந்த வித கட்டுமான பணிகள் மேற்கொள்ளாமலும், ஆலையை இயக்காமலும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News