காங்கயத்தில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி மீண்டும் அதிரடி
- 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
- நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தல் மற்றும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காங்கயம் நகர வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், நகராட்சி வருவாய் அலுவலர் ஆனந்தராஜன் ஆகியோர் தலைமையில் காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த நெகிழிப்பை பயன்படுத்தியதற்காக 13 கடைகளுக்கு ரூ.3500 சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர். நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.