உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

வழித்தடங்களில் கொட்டப்படும் கழிவுகளால் பாதிக்கும் நீர்நிலைகள்

Published On 2022-06-06 07:43 GMT   |   Update On 2022-06-06 07:43 GMT
  • நீராதாரங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டப்படுவது வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகமாகும்.
  • நீராதாரங்களைப் பாதுகாக்க ஆண்டுதோறும் அரசு பெருமளவு நிதி ஒதுக்கி வருகிறது.

குடிமங்கலம்:

திருப்பூர் மாவட்டம் போடிப்பட்டி, குடிமங்கலம் பகுதியில் நீர் வழித்தடங்களில் கொட்டப்படும் கழிவுகளால் நீராதாரங்கள் பாழாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீராதாரங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டப்படுவது வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகமாகும். நமது சந்ததியருக்கு நாம் காசு பணத்தை சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், வளமான மண் போன்றவற்றை விட்டுச் செல்வது மிகவும் அவசியமாகும்.

ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண் வளத்தை படிப்படியாக இழந்து வருகிறோம். அதனை மீட்டெடுக்க மீண்டும் நமது பாரம்பரிய முறையில் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசும், இயற்கை ஆர்வலர்களும் முன்னெடுத்து வருகிறார்கள்.

அதுபோல குப்பைகளைக் கொளுத்துவது, பராமரிப்பில்லாத வாகனங்களைப் பயன்படுத்துவது, தொழிற்சாலைப் புகை என பல வழிகளில் காற்றை மாசுபடுத்தி வருகிறோம்.காற்றைக் காப்பதற்கான வழிகளை உருவாக்குவதில் அரசும், பொதுமக்களும் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை.

நீராதாரங்களைப் பாதுகாக்க ஆண்டுதோறும் அரசு பெருமளவு நிதி ஒதுக்கி வருகிறது. ஆனாலும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பெருமளவு நிதி வீணாகி வருகிறது.ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளுக்கு தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் நீர் வழித்தடங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல இடங்களில் பராமரிப்பில்லாமல் புதர் மண்டி, மண் மூடிக் கிடக்கிறது. மழைக் காலங்களில் பெயரளவுக்கு பராமரிக்கப்படும். இந்த நீர் வழித்தடங்களின் மூலம் நீர் நிலைகளுக்குத் தண்ணீர் சென்று சேர முடியாத நிலை ஏற்படுகிறது.பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால் மழை நீர் வீணாகி வருகிறது.

மேலும் நீர் வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் விவசாயக் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்படுகிறது.மேலும் மழைநீருடன் கலந்து நோய்த்தொற்றுகளுக்குக் காரணமாகிறது.எனவே மழை நீர் வடிகால்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Tags:    

Similar News