தாராபுரத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
- டாக்ஸி,வேன்,டெம்போ டிராவலர் என வாகனத்தை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார்.
- முத்துகுமாரை தேடி வருகின்றனர்.
தாராபுரம்:
தாராபுரம் எஸ்.கே. எஸ் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(வயது 38) .இவர் தாராபுரம் பகுதியில் வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தும் தொழில் செய்து வருகிறார் .வாகனங்களை வாங்க தாராபுரத்தில் உள்ள தனியார் பைனான்சில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ. 21,50,000 கடனாக வாங்கினார்.அதனை கொண்டு டாக்ஸி,வேன்,டெம்போ டிராவலர் என வாகனத்தை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் பைனான்ஸ் புரோக்கர் யாசர் அராபத்,உரிமையாளரான முத்துக்குமார் மற்றும் வீரன் ஆகியோர் கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் கடனை அடைக்க அருண்குமார் ஒரு வாகனத்தை விற்று கடந்த ஆண்டு ரூ.11,50,000 பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.மீதமுள்ள பணம் ரூ.10,00,000க்கு ரூ.25,50,000ம் கேட்டு அவரிடமுள்ள இரு வாகனங்களை பறிமுதல் செய்துவாகனத்தை பறித்துவிட்டனர்.பிறகு இது பத்தாது என கேட்டு அவர் இல்லாத சமயம் வீட்டிற்குச் சென்று தந்தை ஜெயராமனை தாக்கியுள்ளனர்.
இதனை அறிந்த அருண்குமார் தாராபுரம் போலீசில் யாசர் அராபத்( 32),மற்றும் வீரன்(48),முத்துகுமார் ஆகியோர் மீது கந்து வட்டி கொடுமைபடுத்துவதாக புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி முத்துக்குமார்,யாசர் அராபத் மற்றும் வீரன் ஆகியோர் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து யாசர் அராபத்,வீரன் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் முத்துகுமாரை தேடி வருகின்றனர்.