தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் 19-ந் தேதி தொடர் காத்திருப்பு போராட்டம் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு
- பணத்தை வாங்கிக் கொண்டும் விவசாயிகளுக்கு முறையான நில அளவை மற்றும் பட்டா மாறுதல் செய்து தருவதில்லை.
- லஞ்சம் கொடுப்பது மட்டுமில்லாமல் விவசாயிகள் அதிக அளவில் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
தாராபுரம் :
தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி நிலத்தை அளப்பதற்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்கும் நிலஅளவையரை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தாராபுரம் வட்டம் என்பது மிகப்பெரிய வட்டமாகும் இங்கு அதிக அளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அதில் சிறு, குறு விவசாயிகள் தான் அதிகம் .விவசாயிகள் தங்களுடைய நிலத்தை பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட், அல்லது கிரையம் தடம் பாத்தியம் எழுதுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக தாலுகா நில அளவைத்–துறையை நாட வேண்டி உள்ளது.
விவசாயிகள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பத்திரப்பதிவுத்துறைக்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் முறையாக செலுத்தப்படுகிறது. பத்திரப்பதிவு முடிந்ததும் எஸ்.டி.ஆர். எனப்படும் இனங்களில் விவசாயிகளுடைய நிலத்தை அளந்துஉட்பிரிவு செய்து தருவதற்கு ஏக்கர் 1-க்கு ரூ.5ஆயிரம் வரை நில அளவைத்துறை லஞ்சம் வசூல் செய்கிறது.
விவசாயிகளும் எவ்வளவு நாள் அலைவது என்று பணத்தை கொடுத்து வரு–கிறார்கள். மேலும் ஆர்.டி–ஆர். என்ற முறையில் பட்டா மாறுதல் செய்யப்படுகிற இனங்களுக்கும் ஏக்கருக்கு இவ்வளவு என்று கணக்கு போட்டு வசூல் செய்து வருகின்றனர். மேலும் பணத்தை வாங்–கிக் கொண்டும் விவசாயிகளுக்கு முறையான நில அளவை மற்றும் பட்டா மாறுதல் செய்து தருவதில்லை.
ஆனால் ரியல் எஸ்டேட், சோலார் கம்பெனிகள் போன்றவர்கள் கூப்பிட்ட உடனே சென்று அவர்களுக்கு அளந்து கொடுப்பதும் விவசாயிகள் சென்றால் தகுந்த பதில் சொல்லாமல் அலைக்கழிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும் லஞ்சம் கொடுப்பது மட்டுமில்லாமல் விவசாயிகள் அதிக அளவில் அலைச்ச–லுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். ஆகையால் வரும் 19-ந் தேதி நடைபெறுகின்ற தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.