திருமுருகநாத சுவாமி கோவிலில் லட்சத்து எட்டு தீபத்திருவிழா
- கோவில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.
- 2-வது முறையாக தீபத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் லட்சத்து எட்டு தீபத்திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 1000 லிட்டர் நல்லெண்ணெய், லட்சத்து எட்டு விளக்கு மற்றும் திரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட உடன், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்களும், பக்தர்களும் கோவில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.
ஒரே இடத்தில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு, எங்கும் ஒளிமயமாக காட்சி அளித்தது பக்தர்கள் மனதில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக திருமுருகநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நவபாரதி ராமநாதன், உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சென்னியப்பன், உமா காளீஸ்வரி, பழனிச்சாமி, கோவில் செயல் அலுவலர் விமலா, நகராட்சி தலைவர் குமார் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்சத்து எட்டு தீபத்திருவிழா நடைபெறும் நிலையில் திருமுருகநாத சுவாமி கோவிலில் 2-வது முறையாக தீபத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.