வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் அவதி
- வெள்ளகோவிலில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.
- ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். வெள்ளகோவிலில் 200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன, விசைத்தறிக்கூடங்கள், ஆயில் மில்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. வெள்ளகோவிலில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். வெள்ளகோவில் வழியாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. விசேஷ தினங்களில் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இருப்பதில்லை.
இதனால் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருந்து கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகு வரும் பஸ்சில் பயணிகள் நின்று கொண்டும், படியில் தொங்கியவாறும் பயணிக்கின்றனர். அதைத் தொடர்ந்து வரும் பேருந்துகள் ஒரே நேரத்தில் ஒன்றின் பின் ஒன்றாக போதிய பயணிகள் இல்லாமல் ஒரே வழித்தடத்திற்கு செல்கின்றன. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பாளரை நியமனம் செய்து பயணிகளின் தேவைக்கேற்ப பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாறு பயணிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளகோவில் நகராட்சி பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து கழகத்திற்கு என்று தனியாக ஒரு அறையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.