உள்ளூர் செய்திகள்
மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி. 

மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வு

Published On 2023-04-23 07:50 GMT   |   Update On 2023-04-23 07:50 GMT
  • நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா தமிழகமாக மாற்றுவோம் என்று கூறினர்.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

திருப்பூர்:

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பெரிய பள்ளிவாசலில் நம் பூமியில் முதலீடு செய்யுங்கள் என்ற மையகருத்தை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் நெகிழி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும், மஞ்சப்பைகளையும் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

மாணவ செயலர்கள் சுந்தரம், காமராஜ், ராஜபிரபு, பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் மக்களிடம் நம்மை தாங்கும் பூமியை பாதுகாப்பது நம் கடமை, இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், மூட்டை மற்றும் பொட்டலம் கட்டுவதற்கு நெகிழி பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பிளாஸ்டிக் குப்பிகளில் அடைக்கப்பட்டுள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது, உங்களுக்கே அது ஆபத்தை விளைவிக்கும், வீணாகும் உணவு மற்றும் காய்கறிகளை நெகிழி பைகளில் அடைத்து தூக்கி போடக்கூடாது, விலங்குகள் அதை சாப்பிட்டால் குடலடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும், எங்கு சென்றாலும் துணிப்பைகளை எடுத்துச் செல்லுங்கள், மலை மற்றும் வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் போது நெகிழி பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனசரகத்திற்குள் தூக்கி போடக்கூடாது, அது தீமைகளை விளைவிக்கும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா தமிழகமாக மாற்றுவோம் என்று கூறினர். பிறகு 20க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் போல் உடை அணிந்தும், மஞ்சப்பைகளையும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News