பா.ஜ.க., அரசை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு 3 நாட்கள் தொடர் போராட்டம் - திருப்பூர் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
- ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:- மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக விவசாயிகள், தொழிலாளா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவது, வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை வழங்க மறுப்பது ஆகியவை சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. ஆகவே, பாஜக., அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் சென்னைஆளுநா் மாளிகை முன்பாக வருகிற 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் தொடா் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க வேண்டும். மேலும், இப்போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூா் குமரன் சிலை முன்பாக 28-ந் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா். இதில் ஏஐடியூசி., சிஐடியூ., எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.