வணிக வரித்துறையினர் சோதனையால் துறைமுகங்களுக்கு ஆடைகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது - உற்பத்தியாளர்கள் புகார்
- கடந்த3 மாதங்களாக திருப்பூரில் வணிக வரித்துறையின் பறக்கும்படை பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பின்னலாடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வணிக வரி பறக்கும்படையினர் ஆங்காங்கே மடக்கி சோதனை செய்கின்றனர்.
திருப்பூர்:
ஈரோடு கோட்டத்தின் கீழ் திருப்பூர் வணிகவரி மாவட்டம் இயங்கி வந்தது. வணிக வரி அமலாக்க பிரிவு அதிகாரிகள், ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு வந்து வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பாட்டை துவக்கியுள்ளது.அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரில் அமலாக்கப்பிரிவுடன் கூடிய வணிக வரி இணை கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது. வரி ஏய்ப்புகளை கண்டறிந்து பிடிக்க 8 பறக்கும்படை ரோந்து வாகனங்கள் களத்தில் உள்ளன. இதையடுத்து, கடந்த3 மாதங்களாக திருப்பூரில் வணிக வரித்துறையின் பறக்கும்படை பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களில் எடுத்துச்செல்லப்படும் சரக்குகளுக்கு உரிய இ-வே பில், இ- இன்வாய்ஸ் உள்ளதா,சரக்குகளின் தொகை விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளனவா, வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என ஆய்வு நடத்துகின்றனர்.
தீபாவளி நெருங்கும் நிலையில் உற்பத்தி செய்த பின்னலாடைகளை, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விரைந்து அனுப்புவதில் திருப்பூர் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. பின்னலாடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வணிக வரி பறக்கும்படையினர் ஆங்காங்கே மடக்கி சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் அபராதங்கள் விதிக்கின்றனர்.
இது குறித்து ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:-
திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவானதையடுத்து அமலாக்க பிரிவினர் தினந்தோறும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் சோதனைகளால் வரி ஏய்ப்பு பெருமளவு கண்டறிந்து தடுக்கப்படும். இது வரவேற்கத்தக்கது.
இ-இன்வாய்ஸ், இ-வே பில் உருவாக்கப்பட்டு விட்டது என்றாலே வரி ஏய்ப்பு நடைபெற வாய்ப்பு இல்லை. வாகன சோதனையில் ஈடுபடும் அமலாக்க பிரிவு பறக்கும்படையினரோ, உரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றில் சிறு சிறு பிழைகள் இருந்தாலும்கூட (கிளெரிக்கல் மிஸ்டேக்), 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என அபரிமிதமான வரி விதிக்கின்றனர்.
அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை பின்னலாடை துறையினரை பாதிக்க செய்கிறது. சாதாரண பிழைக்கு கூட பெருந்தொகையை அபராதமாக செலுத்த நேரிடுவதோடு குறித்த நேரத்தில் ஆடைகளை, துறைமுகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காலதாமதமும் ஏற்படுகிறது.முறையான ஆவணங்கள் இருந்து, வரி ஏய்ப்பு நோக்கமில்லை என தெரிந்தால், சிறு பிழைகளுக்கு, குறைந்தபட்ச அபராதம் மட்டும் வசூலித்துவிட்டு வாகனங்களை விடுவித்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, வணிகவரி அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-வே பில், இ-இன்வாய்ஸ் இருந்து, சிறு சிறு பிழைகள் இருப்பின் அவற்றை பெரிதுபடுத்த வேண்டாம் என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.