உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

சான்று பெற்ற தரமான விதைகள் மூலம் கூடுதல் மகசூல் ஈட்ட முடியும் - விதைச்சான்று அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-07-23 03:30 GMT   |   Update On 2022-07-23 04:41 GMT
  • உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றின் விதைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • ஒரே நேரத்தில் பூத்து காய்த்து அறுவடைக்கு வருவதால் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி குறுவை சாகுபடிக்கு நேரடி விதைப்பு முறை, எந்திர நடவு முறை மற்றும் வரிசை நடவு முறைகளில் நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றின் விதைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தரமான விதைகளின் அவசியம் குறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-

அமராவதி ஆயக்கட்டுப் பகுதிகளில் தற்போது குறுவை மற்றும் ஆடிப்பட்ட சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பலவிதமான இடுபொருட்களைப் பயன்படுத்தினாலும் விதைத் தேர்வு தான் மகசூலை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.எனவே பிற ரகக் கலப்பில்லாத, திறன் வாய்ந்த, தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.தரமான விதைகளின் நிலைகளான வல்லுநர் விதைகள், ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை விதைகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இதனால் அதிக முளைப்புத்திறன், சீரான பயிர் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை, பூச்சி, நோய் எதிர்ப்புத்தன்மை, ஒரே நேரத்தில் பூத்து காய்த்து அறுவடைக்கு வருவதால் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

அறுவடை செய்த தானியங்களை அப்படியே விற்பனை செய்வதற்குப் பதிலாக, விதைப்பண்ணைகள் அமைத்து அதன் மூலம் தரமான சான்று பெற்ற விதைகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். தரமான சான்று பெற்ற விதைகளை அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமோ பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். விதைப் பண்ணையாக பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் விதைப்பறிக்கை 3 நகல்களுடன் இணையத்தில் பதிவு செய்து, சான்றட்டை, விதை வாங்கிய பட்டியல் மற்றும் வயல் வரைபடத்துடன் திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விதைப்பறிக்கை பதிவுக் கட்டணமாக ரூ.25, வயலாய்வுக் கட்டணமாக நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.100,பயறு வகைப் பயிர்களுக்கு ரூ.80 மற்றும் பகுப்பாய்வுக் கட்டணமாக ரூ.80 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விதைப்பறிக்கை பதிவு செய்த பிறகு பூப்பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் விதைச்சான்று அலுவலர்களால் வயலாய்வு மேற்கொள்ளப்படும். விதைப் பண்ணைகளை அமைத்து விதை உற்பத்தி செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கான தரமான விதைகளை உற்பத்தி செய்கிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News