உள்ளூர் செய்திகள்

அய்யப்பன் கோவிலில் மாலை அணிவதற்கு குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

"சாமியே சரணம் அய்யப்பா" கோஷம் முழங்க அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து இன்று விரதம் தொடங்கினர் - திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலேயே குவிந்தனர்

Published On 2022-11-17 07:57 GMT   |   Update On 2022-11-17 07:57 GMT
  • ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
  • கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

திருப்பூர்:

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

மண்டல பூஜை

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ந்தேதி சபரிமலை அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

சரண கோஷம் முழங்க மாலை அணிந்த பக்தர்கள்

தமிழகத்தில் இருந்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் குருசாமிகள் முன்னிலையில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

திருப்பூர் மாநகரில் அய்யப்பன் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

Tags:    

Similar News