காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கமிட்டி அமைப்பு
- பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
- மான்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் அலங்கியம், குண்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மான், மயில், காட்டுப்பன்றிகள், விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருகின்றன.வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்துவருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திலும் மான், மயில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.விவசாயிகளுக்கு பதில் அளித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.மயில் தேசிய பறவை என்பதால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தொடர்ந்து அறிக்கை அனுப்பி வருகிறோம்.
பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் காடுகள் அல்லாத பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளதாக முந்தைய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அவ்விவரங்கள் ஏற்கனவே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மான்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.