டெங்கு காய்ச்சல் - அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அதிரடி உத்தரவு
- மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவுகளில் தாமதம் கூடாது. மாதிரி எடுத்த 6 மணி நேரத்துக்குள் முடிவுகளை வழங்கி விட வேண்டும் என ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு தொடர்பவர்கள் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை பணிகளை வேகப்படுத்த வேண்டும். மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு விட்டால் அவர் குறித்த விபரங்களை உடனடியாக நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி, மாநகராட்சி நகர் நல அலுவலர், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.