உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டஉடுமலை-மூணாறு அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் இரு மாநில மக்கள் வலியுறுத்தல்

Published On 2022-09-11 07:29 GMT   |   Update On 2022-09-11 07:29 GMT
  • ரோட்டை முழுமையாக புதுப்பித்து விபத்துகளை குறைக்க வேண்டும்.
  • உடுமலை பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ் இவ்வழித்தடத்தில் சென்று வந்தது.

உடுமலை:

உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் ரோட்டில் சின்னாறு வரையுள்ள 28.80 கி.மீ., நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகங்களின் வழியாக இந்த ரோடு செல்கிறது.மறையூர், காந்தலூர், மூணாறு உட்பட கேரள மாநில பகுதிகளில் இருந்து அதிக அளவு வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாக உடுமலைக்கு வருகின்றன.

அதே போல் உடுமலையிலிருந்து சுற்றுலா வாகனங்கள் இவ்வழியாக அதிக அளவு செல்கின்றன.சுற்றுலா மற்றும் இரு மாநில போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ரோடு பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக தொடர் மழைக்குப்பிறகு ரோட்டோரம் அரிக்கப்பட்டுள்ளது.ரோட்டின் ஒரு பகுதி குழியாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது நிலைதடுமாறி இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். ரோட்டை முழுமையாக புதுப்பித்து விபத்துகளை குறைக்க வேண்டும்.

உடுமலையில் இருந்து சின்னார், மறையூர் வழியாக மூணாறுக்கு இயக்கப்படும் பஸ்களை நம்பி, நூற்றுக்கணக்கான பயணிகள் உள்ளனர். முன்பு, மாலை 4:30 மணிக்கு உடுமலை பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ் இவ்வழித்தடத்தில் சென்று வந்தது.தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இப்பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உடுமலைக்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் மறையூர் மக்கள் இரவு, 7:30 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.முக்கிய வழித்தடத்தில் திடீரென அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பஸ் இயக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு இரு மாநில பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தினர் மீண்டும் மாலை நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News