இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
- மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்–தப்பட உள்ளது.
- துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களின் குழந்தைகள் மாநகர பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிகளில் படித்து இடைநின்ற, படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் பேசும்போது, `பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதை சிறப்பாக செயல்–படுத்த வேண்டும். ஆத்துப்பாளையம், வெங்கமேடு பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 84 பேர் பள்ளி செல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவர்களின் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவும் ஆசிரியர்களை நியமிக்கலாம்' என்றார். இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.