டாலர் மதிப்பு உயர்வால் வெளிநாடுகளில் இருந்து எந்திரங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் - பின்னலாடை துறையினர் கவலை
- அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது.
- ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.
திருப்பூர்:
சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே அதிக அளவில் நடக்கிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் மாற்றங்கள் நமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நடப்பு ஆண்டு ஜனவரி இறுதி வரை 74.65 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் 76 ரூபாயை கடந்தது.
அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது. தற்போது 79.88 ரூபாயாக காணப்படுகிறது.டாலர் மதிப்பு உயர்வு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினருக்கு சாதகம், பாதகம் இரண்டையும் கொடுக்கிறது. சாதகங்களைவிட பாதகமே அதிகம் என்பதால் டாலர் மதிப்பு உயர்வு தொழில் துறையினரை கவலை அடைய செய்கிறது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-
டாலர் மதிப்பு உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழல் உருவாகியிருப்பது உண்மைதான். அதேநேரம். இந்த நிலை நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது, டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைத்து விடுவர். இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்றுமதி ஆடைகளின் இணைக்கும் அக்சசரீஸ்களை அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பின்னலாடை நிறுவனங்கள் அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய கால நன்மையே அளிக்கும். தலைவலிதான் அதிகம்.
டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் துணி, பிரின்டிங் இங்க், அக்சசரீஸ், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என ஆடை உற்பத்தி சார்ந்த மெஷினரிகளை உலகளாவிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பா தவிர மற்ற நாடுகளுடனான வர்த்தகம் டாலரிலேயே நடக்கிறது. இப்போது டாலர் மதிப்பு உயர்வு திருப்பூரில் ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களை மிகவும் பாதிக்க செய்கிறது.இறக்குமதி மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிரின்டிங் போன்ற ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.வெளிநாடுகளிலிருந்து அதிநவீன எந்திரங்களை இறக்குமதி செய்வதும் சிக்கலாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.