உப்பு இல்லாமல் சாயமிடும் நவீன தொழில்நுட்பம் அறிமுகம்
- ஆர்.ஓ., முறையில் கழிவுநீரில் இருந்து சுத்தமான தண்ணீர் 80 சதவீதம் பிரித்து எடுக்கப்படுகிறது.
- சாய ஆலைகளில் மட்டும் அகற்றப்படாத உப்பு 4 லட்சம் டன் அளவுக்கு தேங்கியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் சாய ஆலைகளுக்கு ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் வருவதற்கு முன்னரும், பின்னரும் பெரும் சவாலாக இருப்பது உப்பு. எதிர்பார்த்த நிறத்தில் தரமாக சாயமிட உப்பு கட்டாயமாகிவிட்டது. ஒரு கிலோ துணிக்கு 15 கிராம் வரை உப்பு சேர்க்கப்படுகிறது.
சாயக்கழிவு வெளியேற்றியதில் அதிக அளவு உப்புத்தன்மை இருந்ததால் சுற்றுச்சூழல் பாழாகிவிட்டது. அதற்காகவே திருப்பூருக்கு மட்டும் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டது. திருப்பூர் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் முதல்கட்ட சாயக்கழிவு சுத்திகரிப்பில் கலர், துர்நாற்றம் நீக்கப்படுகிறது. ஆர்.ஓ., முறையில் கழிவுநீரில் இருந்து சுத்தமான தண்ணீர் 80 சதவீதம் பிரித்து எடுக்கப்படுகிறது.
மீத கழிவில் இருந்து 10 சதவீதம் வரை மிக்சர் சால்ட் என்ற கழிவுகள் கலந்த உப்பு பிரித்து வைக்கப்படுகிறது. மீதியுள்ள 10 சதவீத தண்ணீர் உப்புத்தன்மை நிறைந்த 'பிரெய்ன் சொல்யூஷன்' என்ற பெயரில் பிரித்து எடுக்கப்படுகிறது. சாயக்கழிவுநீரில் இருந்து உப்பு மற்றும் 'பிரெய்ன் சொல்யூஷன்' பிரித்து எடுக்க லிட்டருக்கு 25 முதல் 40 பைசா வரை செலவாகிறது. இந்நிலையில் சாய ஆலைகள் பயன்பாட்டுக்காக உப்பு இல்லாமல் சாயமிடும் 'சொல்யூஷன்' ஒன்றை கோவை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் கூறுகையில்,
சாய ஆலைகளில் மட்டும் அகற்றப்படாத உப்பு 4 லட்சம் டன் அளவுக்கு தேங்கியுள்ளது. உப்பு கலந்த கழிவுநீரை சுத்திகரிக்க பெரும் செலவாகிறது. இப்பிரச்சினைகளை தவிர்க்க உப்பு இல்லாத சாயமிடல் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. சால்ட் ப்ரீ டையிங் என்ற எஸ்.எப்.டி., தொழில்நுட்பத்தில் சாயமிடுவதற்கு முன்பாக சொல்யூஷன் ஒன்றை சாயமிடும் எந்திரத்தில் பயன்படுத்த வேண்டும்.
பிறகு வழக்கம் போல் சாயமிடலாம். உப்பு தேவையே இல்லை. பெருந்துறை, கரூர், திருப்பூர் சாய ஆலைகளில் வெற்றிகரமாக சோதனை நடத்தி பார்த்துள்ளோம். விரைவில் சாய ஆலை உரிமையாளர் சங்கத்துடன் பேசி புதிய தொழில்நுட்பத்தால் உப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வழிவகை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.