மலைவாழ் மக்களுக்கு தீ தடுப்பு-மீட்பு குறித்த பயிற்சி முகாம்
- தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் மீட்பு குறித்து, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில், செயல்விளக்க பயிற்சி நடந்தது.
- மரத்தின் கிளைகள், இலைகளை கொண்டு அணைப்பது மற்றும் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட கரட்டுபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு, வனத்தீ ஏற்படுவதை தடுத்தல், தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் மீட்பு குறித்து, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில், செயல்விளக்க பயிற்சி நடந்தது.
அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ், உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் மூர்த்தி தலைமையிலா தீயணைப்புத்துறை வீரர்கள், தீத்தடுப்பு குறித்தும், வனத்தீ ஏற்படுவது மற்றும் அதனை தடுப்பது குறித்தும் வனப்பகுதிகளில் தீத்தடுப்புக்கோடு அமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் வனத்தில் அடிபட்ட நபர்களை மீட்கும் முறைகள் குறித்தும், செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.பின்னர் தீயணைப்புத்துறையினரால், வனத்தில் செயற்கையான தீ விபத்து உருவாக்கப்பட்டு, வனப்பாதுகாவலர்களைக்கொண்டு, மரத்தின் கிளைகள், இலைகளை கொண்டு அணைப்பது மற்றும் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.