சம்பளம் வழங்காவிட்டால் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவேன் - அரசு ஊழியர் அறிவிப்பால் பரபரப்பு
- கடந்த 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
- ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார்.
பல்லடம்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது36). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் கடந்த 2010 ம் ஆண்டு காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக அரசு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இவர் பணி புரிந்த பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இன்னமும் ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் பஸ்சில் செல்வதற்கு கூட பணம் இல்லாததால் தினமும் சூலூர் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று விட்டு இரவு மீண்டும் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பிரயாணம் செய்து வீடு வந்து சேர்வதாக வேதனையுடன் அவர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பணியாற்றுகிறேன். அக்டோபர் மாதம் 17-ந் தேதி திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரின் ஜீப் டிரைவராக இடமாறுதல் செய்யப்பட்டேன். பணியில் சேரும்போது முன் ஊதியச் சான்று வழங்க வேண்டும். இதன்படி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் கடந்த 83 நாட்களாகியும், எனக்கு இன்னும் முன் ஊதியச் சான்று கிடைக்கவில்லை.மேலும் அக்டோபர் 1-ல் இருந்து 17ந் தேதி வரை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றியதற்கு சம்பளமும் வரவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் இன்னும் எனக்கு முன் ஊதியச் சான்று தரப்படாததால் தற்போது பணியில் சேர்ந்த இடத்தில் சம்பளம் எனக்குத் தரப்படவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்படுகிறேன். தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி சமாளித்தேன். தற்போது பஸ்சுக்கு கூட பணம் இல்லாததால் சைக்கிளில் தினமும் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூருக்கு வந்து செல்கிறேன். சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்வதால் கடும் உடல் வலி ஏற்படுகிறது. எனவே எனக்கு உடனடியாக பாக்கி சம்பளமும் முன் ஊதியச் சான்றும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.