தென்னை வளர்ச்சி வாரியத்தில் தொழிற்கல்வி சார்ந்த பயிற்சி நிறைவு
- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக கடந்த 10-ந் தேதி முதல் தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி நடைபெற்றது.
- நிறைவு விழாவையொட்டி மையத்தில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது.
உடுமலை:
உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவ மையம் உள்ளது.இந்த மையத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக கடந்த 10-ந் தேதி முதல் தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் வேளாண் அறிவியல் பிரிவில் படித்து வருகின்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது மாணவர்களுக்கு தென்னை உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்கள் கற்பிக்கபட்டது. மேலும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவையொட்டி மையத்தில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலையையும் பார்வையிட்டு மாணவர்கள் பல தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.10 நாள் பயிற்சியின் நிறைவு விழா தளியில் அமைந்துள்ள தென்னை மகத்துவ மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மேலாளர் கு.ரகோத்துமன் தலைமை தாங்கினார்.ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்தமைக்கு மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியாளர் ஹேமலதா தனது அனுபங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். முடிவில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விவசாய ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.