உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உணவு தானிய உற்பத்தியில் விதை முக்கிய பங்கு வகிக்கிறது - அதிகாரி விளக்கம்

Published On 2023-11-04 08:54 GMT   |   Update On 2023-11-04 08:54 GMT
  • விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும்.
  • ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும்

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்துக்கு உட்பட்ட கோட்டமங்கலம் பகுதியில் உள்ள பாசிப்பயறு கோ 8 ஆதார நிலை 1 விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும். பசுமைப்புரட்சிக்குப்பிறகு பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவையை பூர்த்தி செய்ததிலும், உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதற்கும் நல்ல முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, அதிக மகசூல் அளித்த ரகங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு தரமான விதைப்பண்ணைகள் அமைத்து, வயலாய்வுகள் மேற்கொண்டு பெறப்பட்ட சான்று செய்யப்பட்ட விதைகள் முக்கிய காரணமாக இருந்தன. ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும். தற்போது ஆதார நிலை விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாசிப்பயறு கோ 8 ரகமானது 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிற பாசிப்பயறு ரகங்களுடன் ஒப்பிடும் போது 55 முதல் 60 நாட்களில் வளர்ந்து ஏக்கருக்கு 340 கிலோ மகசூல் தரக்கூடியது.

ஒரு செடிக்கு 20 முதல் 25 காய்களுடனும், ஒரு காய்க்கு 10 முதல் 14 விதைகள் உடன் 1000 தானியங்களின் எடை 35 முதல் 45 கிராம் கொண்டதாக இருக்கும். அஸ்வினி தண்டு துளைப்பான், மஞ்சள் மொசைக் வைரஸ் மற்றும் வேர் அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. விதைப்பண்ணை பூ பருவத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது விதை ஆதாரம், பயிர் விலகு தூரம், கலவன்கள் சதவீதம், வயல் தரம் உள்ளிட்ட காரணிகள் ஆய்வு செய்யப்படும். கலவன்கள் குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் ஆதார நிலை விதை பண்ணைக்கு 0.1 சதவீதம் , சான்று நிலைக்கு 0.2 சதவீதம் இருக்குமாறு வயல் தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு வயல் தரங்கள் பராமரிக்கப்படாத விதை பண்ணைகள் தகுதி நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சரவணன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News