பல்லடம் அரசு கல்லூரியில் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- 230 மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டனர்.
- திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.
பல்லடம்:
பல்லடம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையோன சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நடைபெற்றது. பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 3 பிரிவுகளில் 120 மாணவிகள், 110 மாணவர்கள் உள்பட 230 மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற18 மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜகோபால், அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனியன், ஆசிரியர்கள், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் மருதை நன்றி கூறினார். இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் வரும் 25ம் தேதி திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.