அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை குழு அமைக்கும் பணி தீவிரம்
- அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன.
- பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
தாராபுரம்:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு வரும் ஜூன் மாதம் 6 -ந்தேதி முதல் செயல்பட உள்ளது.இக்குழுவில் தலைமையாசிரியர், உயர்வழிகாட்டல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர், கருத்தாளர் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இடம்பெறவுள்ளனர்.
உடுமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் குழு வாயிலாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.உயர்கல்விக்கு தயார் செய்வதும், விண்ணப்பிக்கச் செய்வதும் இக்குழுவின் முக்கிய பணியாகும். இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டும் வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.