உடுமலையில் ரெயில்வே தண்டவாளத்தில் அமரும் போதை ஆசாமிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
- ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது.
உடுமலை:
கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில்உடுமலை- கொழுமம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள சந்திப்பு பகுதியில் சிறிய அளவிலான ஜல்லி கற்கள் காணப்பட்டது. இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக கற்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் ரெயில்வே போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது: -
ரெயில்வே வழித்தடம் அருகில், டாஸ்மாக் கடை உள்ளதால், தண்டவாளம் பகுதியில் அமர்ந்து பலர் மது அருந்தி வருகின்றனர். மேலும் ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது. இது சதிச்செயலாக இருக்க வாய்ப்பில்லை. தண்டவாளத்திற்கு மேல் பெரிய அளவிலான கல் வைத்தால் மட்டுமே, சதிச்செயலாக கருத முடியும். கேட் பகுதியில், தண்டவாளம் மற்றும் ரோட்டில் உள்ள இரும்பு பகுதிக்கு இடையில் ஜல்லிக்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், போதை குடிமகன்கள் யாராவது இதனை செய்திருக்கலாம். ரெயில்வே வழித்தடத்தில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கற்களை அகற்றும் வகையில், ரெயில்வே கேட் சிறிது நேரம் மூடப்பட்டதால் சாலை போக்குவரத்து பாதித்தது.