உடுமலை பகுதி கிராமங்களில் அரசு அலுவலகங்களுக்கு இணைய தள இணைப்பு வழங்கும் பணி தீவிரம்
- ஊராட்சி அலுவலகங்களிலும் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.
- இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், தடையின்றி கிராமங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர்:
மத்திய, மாநில அரசு சார்பில், பல்வேறு சேவைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு வரியினங்கள் செலுத்துதல், சான்றிதழுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் இ - சேவை மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சி அலுவலகங்களிலும் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்லைனில், வரியினங்களை செலுத்த கிராமப்புறங்களில் பல்வேறு சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக இணையதள வசதி போதுமான அளவு வேகம் இல்லாததால், காலதாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு விண்ணப்பத்தை பதிவு செய்யவும் நீண்ட நேரம் ஆகிறது. காத்திருக்கும் மக்கள் வேறு வழியின்றி, நகரிலுள்ள இ - சேவை மையங்களுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக, கிராமப்புறங்களிலுள்ள, இ - சேவை மையங்கள், ஊராட்சி அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கு இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது, மத்திய அரசு திட்டத்தின் கீழ், கேபிள் வாயிலாக கிராமங்களிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு இணைய தள இணைப்பு வழங்க பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனம் வாயிலாக நகரங்களில் இருந்து, உடுமலை பகுதி கிராமங்களுக்கு கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், தடையின்றி கிராமங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.