திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரியில் ரூ.11 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு
- திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதிய பிரதான கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- திருப்பூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் புதிய பிரதான கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருப்பூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-
எல்.ஆர்.ஜி மகளிர் கலைக்கல்லூரியில் சிதலமடைந்துள்ள முதன்மை கட்டிடத்திற்கு மாற்றாக ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பிரதான கட்டிடத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் பல்வேறு வசதிகளுடன் மூன்று தளங்களாக கட்டப்பட்டுள்ளது.
இதில் தரைதளத்தில் முதல்வர் அறை, நூலகம், இயற்பியல் ஆய்வகம், இயற்பியல் புத்தக சேமிப்பு அறை, தேர்வு அறை, டிஜிட்டல் அறை, பதிவறை மற்றும் உடற்பயிற்சி அறைகளும், முதல் தளத்தில் ஆசிரியர்கள் அறை, விலங்கியல் அருங்காட்சியம் அறை, 4 வகுப்பறைகள்,4 ஆய்வகங்கள் மற்றும் விலங்கியல் புத்தக சேமிப்பு அறைகளும்,
இரண்டாம் தளத்தில் ஆசிரியர்கள் அறை, 12 வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம் மற்றும் புத்தக சேமிப்பு அறைகளும் உள்ளன. மேலும், அனைத்து தளங்களிலும் கழிப்பறை வசதிகள், உடல் திறன் குறைந்தோருக்கான சாய்வுதளம், திறந்தவெளி கலையரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், மழைநீர் சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இக்கட்டடத்தில் இடம் பெற்றுள்ளன என்றார்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், 2-ம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், எல்.ஆர்.ஜி. கல்லூரி முதல்வர் எழிலி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் சக்திவேல், உதவி பொறியாளர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.