தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருப்பூரில் மாரத்தான் போட்டி 7-ந்தேதி நடக்கிறது
- 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறது.
- போட்டியில் பங்கேற்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்
திருப்பூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான மாரத்தான் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த மாரத்தான் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு வருகிற 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறது. சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு எஸ்.கே.எம். மகால் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு முடிக்கப்படும். பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரம், சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு கணேஷ் மகால் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு முடியும்.
25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் போட்டி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு இ.பி. அலுவலகம் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன் முடியும். பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரம் சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு கணேஷ் மகால் வரை சென்று சிக்கண்ணா அரசு கல்லூரிக்கு முன் முடிவடையும்.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக 2 ஆயிரம், 4 முதல் 10 வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களின் நகல் மற்றும் அசல் மருத்துவ சான்று ஆகியவற்றை சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் போட்டி நடக்கும் இடத்தில் அளிக்கலாம். அதன்பிறகே தனி எண் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.