மாதந்தோறும் மருத்துவ முகாம்-மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
- குடியிருப்பு வீடுகள் அனைத்தும், தகரத்தினால் ஆன கூரையை கொண்டவை ஆகும்.
- மாதம் ஒரு முறையாவது பொதுமருத்துவ முகாம் நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை அமராவதி, வந்தரவு, கொழுமம் வனச்சரகங்களில் 13க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன. அவற்றில்தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி, கோடந்தூர், ஆட்டுமலை, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, திருமூர்த்திநகர், கரட்டுபதி, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இவர்களின் குடியிருப்பு வீடுகள் அனைத்தும், தகரத்தினால் ஆன கூரையை கொண்டவை ஆகும். இதனால் மழையின்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தற்போது மழையின்தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள், சளி இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால், சிகிச்சைக்காக தொலை தூரத்தில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனையை நாடி வர வேண்டியுள்ளது.பொருளாதாரம் மற்றும் வாகன வசதி இல்லாதவர்கள், சிகிச்சை பெறுவதற்கு முனைப்பும் காட்டுவதில்லை. எனவே ஒவ்வொரு செட்டில்மென்ட் பகுதியிலும், மாதம் ஒரு முறையாவது பொதுமருத்துவ முகாம் நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.