முத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் பீதி
- கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
- சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே ஊடையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நாய் ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனது. இந்த நிலையில் ஊடையம் கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து காணாமல் போன நாயை கொன்று தின்று விட்டதாகவும், சிறுத்தையை ஈரோடு மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி, கொளந்தபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேரில் பார்த்ததாகவும், தொிவித்தார்.
எனவே வேலம்பாளையம், முத்தூர், அஞ்சூர், கார்வழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. மேலும் சமூக வலைத்தளங்களில் சிறுத்தை ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்து இருப்பது போல் தவறாக சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று வெளியானது.
இதனால் ஊடையம் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் கோட்டம் மற்றும் காங்கயம் துணை கோட்ட வனத்துறை அதிகாரிகள், கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஊடையம் கிராம பகுதிகளில் கரும்புத்தோட்டம், வண்டி தடம் பாதை, மண் சாலை பகுதிகளில் சிறுத்தை நடமாடி, உலாவியதற்கான அறிகுறி ஏதாவது கிடைக்கிறதா என்றும், சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் ஊடையம் சுற்றுவட்டார கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர்களுக்கு கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் ஊடையம் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்களிடம் கூறியதாவது:-
ஊடையம் கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எவ்வித அறிகுறியும் மற்றும் எவ்விதமான தகவலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் கிராம பொதுமக்கள் உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து கிராம பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வீண் வதந்திகளை உண்மை என நம்பி பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. இருப்பினும் இப்பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் பகல், இரவு நேரங்களில் எச்சரிக்கையாகவும், மிகுந்த பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.