பெருமாநல்லூர் அருகே பஸ் நிறுத்தத்தில் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் முதியவர்
- பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார்.
- இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார். இதை கண்ட பயணிகள் ஏதோ மது அருந்திவிட்டு தூங்குவதாக நினைத்தனர். இதனால் பஸ் நிறுத்த இருக்கையில் அமர்வதற்கு கூட அஞ்சினர். இந்த நிலையில் திடீரென ஒரு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் மனிதாபிமானத்துடன் அந்த பெரியவர் மீது பரிவு காட்டினார். இதையடுத்து அந்த பெண் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார். அந்த பெரியவரால் எழுந்து, அமர்ந்து உட்கார முடியாத சூழ்நிலையில் படுத்த படுக்கையாக கிடப்பதால் அந்தப் பெண் அந்த பெரியவர் கையில் கொடுத்தார். அதை அவர் படுத்த நிலையிலேயே சிறிது சிறிதாக இட்லியை சாப்பிட தொடங்கினார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள பயணிகள் கண்டு மெய் சிலிர்த்தனர். பொதுவாக யாராவது அனாதையாக சாலையோரம் கிடந்தால் அவரை யாரும் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் இந்த பெண் நடந்து கொண்ட விதம் மனிதாபிமானத்தை உண்டாக்கியது. தற்போது இந்த பெரியவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. சமூக அறக்கட்டளை நிர்வாகத்தினர் உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.