உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ஸ்டார் ரேட்டிங் மின் சாதனங்கள் பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தல்

Published On 2022-10-16 07:43 GMT   |   Update On 2022-10-16 07:43 GMT
  • பொதுமக்களும் ஸ்டார் ரேட்டிங் மின் சாதன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும்.
  • அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்கள், குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக திறனோடு செயல்படுகிறது.

திருப்பூர்:

மின் சிக்கனத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பத்துடன் மோட்டார், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கென மின் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்கள், குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக திறனோடு செயல்படுகிறது. அத்தகைய மின்சாதன பொருட்களின் மின் சேமிப்புத்திறன் அடிப்படையில், மத்திய எரிசக்தி துறை, பீரோ ஆப் எனர்ஜி எபீஷியன்சி (பி.இ.இ.,) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி அத்தகைய பொருட்களுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக, தமிழகத்தில் மின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை (டான்ஜெட்கோ) நோடல் ஏஜென்சியாக நியமித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் தொழில் நிறுவனங்கள், விவசாயப்பரப்பு அதிகமுள்ள திருப்பூர் மாவட்டத்தில் மின் பயன்பாடு மற்றும் மின் செலவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களில், மின் சிக்கனத்தை மையப்படுத்தி ஸ்டார் ரேட்டிங் கொண்ட மின்சாதனங்களே பயன்படுத்தப்படுகிறது.இதனால் அரசின் இலவச மின் இணைப்பு பெற்று மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.குறைந்தபட்சம் 4 ஸ்டார் ரேட்டிங் உள்ள மின் சாதனங்களை பொருத்தினால் தான் மின் இணைப்பு வழங்க அனுமதியும் அளிக்கப்படுகிறது.பொதுமக்களும் ஸ்டார் ரேட்டிங் மின் சாதன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News