உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் - போதிய பஸ்கள் இயக்கப்படாததால் கடும் அவதி
- உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது.
- கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நாள்தோறும் அரசு பஸ்களும், விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்குவது வழக்கம்.
உடுமலை:
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது.இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா,சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக ஒரு சேர எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்கள். அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் அருவியில் குளித்து மகிழவும் நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நாள்தோறும் அரசு பஸ்களும், விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்குவது வழக்கம்.ஆனால் நேற்று உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த பக்தர்கள் உடுமலை மத்திய பஸ் நிலையத்திலேயே மணி கணக்கில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
தீபாவளி பண்டிகை விடுமுறை மற்றும் அமாவாசை விழாவை கொண்டாடுவதற்கு திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தோம்.ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மத்திய பஸ் நிலையத்திலேயே மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது பஸ் வரும் என்றார்கள்.ஆனால் நேரம் சென்றதே தவிர பஸ் வரவில்லை.
மேலும் அமாவாசையையொட்டி மதியம் 12 மணிக்குள் திதி,தர்ப்பணம் கொடுத்து 12 மணியில் இருந்து 1 மணிக்குள் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும்.ஆனால் பஸ் வசதி இல்லாததால் திருமூர்த்தி மலைக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க இயலவில்லை. ஒரு சிலர் ஆட்டோ மற்றும் வேனுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.200 கொடுத்து திருமூர்த்தி மலைக்கு சென்றனர். போதிய பஸ்கள் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். பொதுமக்களின் எண்ணங்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அதிகாரிகள் உள்ளனர்.ஆனால் உடுமலை போக்குவரத்து கிளை அதிகாரிகள் பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டாதது வேதனை அளிக்கிறது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.எனவே உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனால் கார்,வேன்,பைக் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கு சென்று உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அடிவாரத்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சில பொதுமக்கள் பாலாற்றின் கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் பஞ்சலிங்க அருவி, கோவில் மற்றும் அணைப்பகுதியில் பக்தர்கள்,சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.