2ம் போக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வேண்டுகோள்
- நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
காங்கயம்:
காங்கயம் பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு காங்கயம் வேளாண்மை துறை உதவி இயக்குநா் து.வசந்தாமணி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா பருவம் நெல்-2 ம் போக பயிருக்கு சிறப்பு பருவமாக கணக்கிட்டு, எதிா்பாராத இயற்கை இடா்ப்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே நெல் இரண்டாம் போகம் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காங்கயம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் து.வசந்தாமணி 9344541648 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.