பி.ஏ.பி., வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
- திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.
- திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூா் தெற்கு அவிநாசிபாளையம் செங்காட்டுபாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் இல்லாததால் விவசாயிகள் உள்பட பலா் சிரமத்தை சந்தித்து வருகின்றனா் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்காததால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.
இதற்கிடையே, போராட்டத்துக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, விவசாயிகளுடன் வட்டாட்சியா் கோவிந்தராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இதில், பி.ஏ.பி. வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு, விவசாயிகளுக்கு நீா் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.