தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் - திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
- தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.
- அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
அவிநாசி:
அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக., உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 18 நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி ஆணையா் பி. ஆண்டவனிடன் கோரிக்கை மனு அளித்தனா்.
அதில், கூறியிருப்பதாவது:- 5 மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால், நகராட்சி முழுவதும் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், சாக்கடை கால்வாய் தூய்மை செய்யப்படாமல் புழு மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால் செலவு தொகையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. மக்களின் வரிப்பணம் பெருமளவு தூய்மைப் பணிக்கு செலவாகிறது. பொது நிதியிலிருந்து புதிதாக தெரு விளக்குகூட அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனு அளிப்பின்போது, நகா்மன்றத் துணைத் தலைவா் ராஜேஸ்வரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் லதா சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.