கெட்டுப்போன கேக் விற்பனை - பல்லடம் பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
- பேக்கரியில், குடும்பத் தலைவி ஒருவர், ரெட் வெல்வெட் என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார்.
- கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நியாயம் கேட்டுள்ளார்.
பல்லடம்:
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பேக்கரி 10க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பேக்கரியில், குடும்பத் தலைவி ஒருவர், ரெட் வெல்வெட் என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார். பின்னர் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று மகள்களுக்கு கேக் சாப்பிட கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட இருவரும் வாந்தி வருவதாக கூறி கேக்கை துப்பி உள்ளனர்.
இதையடுத்து அவர் கேக்கை முகர்ந்து பார்த்தபோது அது கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேண்டுமானால் வேறு வாங்கிக்கொள் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் சம்பவ இடம் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் அந்த கடையில் கேக்குகளை ஆய்வு செய்து காலாவதியாகி கெட்டுப்போன கேக்குகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார். மேலும் கெட்டுப் போன கேக்குகளை இனி விற்பனை செய்யக்கூடாது.உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதுகுறித்து அவர் கூறுகையில், கெட்டுப் போன கேக் உணவு பாதுகாப்பு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை வந்த பின்னர் பேக்கரி நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். கெட்டுப்போன கேக்கை விற்ற சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.