இன்று மாலை சூரசம்ஹாரம் - திருப்பூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
- பக்தர்கள் பங்கேற்று, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, மனமுருக வழிபட்டனர்.
- சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். இதையொட்டி கோவில்களில் தினமும் காலை வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்து வந்தன. பக்தர்கள் பங்கேற்று, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, மனமுருக வழிபட்டனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான்கோவில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவில்.மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில்களில் கந்தசஷ்டி விழா சிறப்புடன் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, சூரசம்ஹார விழா இன்று மாலை நடக்கிறது. அதற்காக, சூரபத்மன் பொம்மைகளும், கஜமுகாசுரன், சிங்கமுகன், பாணுகோபன், சூரபத்மன் தலை பொம்மைகள் புதுப்பிக்கப்பட்டன.
இன்று மதியம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, யாகபூஜைகளும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெறும் வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வேலாயுதத்துடன் போர்க்களம் புகும் முருகப்பெருமான், அசுரர்களை வதம் செய்து, சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னிடம் சேர்த்து கொண்டு, ஜெயந்திநாதராக கோவில் திரும்புவார். அதன்பின், விரதம் இருந்த பக்தர்களுக்கு, தயிர் அல்லது மோரில் ஊறவைத்த வாழைத்தண்டு பிரசாதம் வழங்கப்படும்.
சூரசம்ஹாரத்தை காண திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காலையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை திருக்கல்யாண உற்சவமும், திருமண விருந்து நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் அனைத்து கோவில்களிலும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.