உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம். 

கரும்புகளை வெட்டும் விவகாரம் - அமராவதி கூட்டுறவு ஆலை அதிகாரிகள்-விவசாயிகள் 6-ந்தேதி ஆலோசனை

Published On 2022-07-03 08:32 GMT   |   Update On 2022-07-03 08:32 GMT
  • கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
  • கரும்பு 12 மாதத்திற்குள் வெட்டப்பட வேண்டும்.

மடத்துக்குளம்:

உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கரும்பு அரவை செய்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.நடப்பாண்டு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில், கரும்பு அரவை துவங்கியது.ஆட்கள் பற்றாக்குறையால், விளைநிலங்களில் கரும்பு வெட்டும் பணி இழுபறியானது. அதோடு ஆலையிலுள்ள பழமையான இயந்திரங்கள் புதுப்பிக்காததால் அடிக்கடி இயந்திரங்கள் பழுது ஏற்பட்டு ஆலை அரவைப்பணிகள் பாதித்து வருகிறது.இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் நிலையிலுள்ள கரும்பு வெட்டாமல் காய்ந்தும், வீணாகியும் வருவதாகவும் முன்னுரிமை அடிப்படையில் கரும்பு வெட்டாமல் முறைகேடு நடப்பதாகவும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பழனி நெய்க்காரபட்டியைச்சேர்ந்த கரும்பு விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கரும்பு 12 மாதத்திற்குள் வெட்டப்பட வேண்டும்.ஆனால் 14 மாதம், 16 மாதம் ஆகியும் இதுவரை வெட்டப்படவில்லை.இதனால் கரும்பு பயிர்கள் காய்ந்தும், எடை குறைந்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சண்முகம்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி அழகுநாச்சிக்கு சொந்தமான கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மின் கசிவு விபத்து ஏற்பட்டு பாதித்தது.இது குறித்து சர்க்கரை ஆலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உடனடியாக வெட்டி அரவைக்கு கொண்டு வராமல் முழுவதும் வீணாகியுள்ளது.

எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பு வெட்டி, அரவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என விவசாயிகள் ஆக்ரோஷமாக கூறினர்.போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். இதில் வருகிற 6-ந் தேதி, ஆலை நிர்வாக குழு மற்றும் மேலாண்மை இயக்குனர் தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

Similar News