திருப்பூர் மாவட்டத்தில் 90 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - சமூக நலத்துறை அதிகாரி தகவல்
- குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகள் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில், சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா பேசியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 111 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, 90 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 வழக்குகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா பேசியதாவது:- புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டத்தில் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி அருகே கடைகளில் போதை பொருட்கள் விற்றால், அவற்றை உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.