திருப்பூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா - 13-ந்தேதி தொடங்குகிறது
- வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 18-ந்தேதி நடைபெற உள்ளது.
- விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் காலேஜ் ரோடு, கொங்கணகிரியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, 13-ந் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா ெதாடங்குகிறது. தொடர்ந்து, பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம், வேல் பூஜை தொடர்ந்து வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் கந்த பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் திருக்கல்யாண வைபவம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், அபிஷேகம் மற்றும் தீபாராதனை போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இதேபோல் வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 18-ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 13-ந்தேதி அபிஷேகம், காப்புகட்டுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் விழா தொடங்குகிறது. மேலும் திருக்கல்யாண உற்சவம், மகாதீபாராதனை, சுவாமி திருவீதி உலா போன்றவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 13- ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து, சஷ்டி விரதம் துவங்குகின்றனர். தொடர்ந்து அலகுமலை ஆஞ்சநேயர் வளாகத்தில் உள்ள சண்முகம் மஹாலில் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 14-ந் தேதி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேக ஆராதனை, கலசாபிஷேகம், மகா அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. மேலும் 18-ந்தேதி மதியம் 3 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் சுவாமி கோவிலில் சூரனை வதம் செய்ய பாலதண்டாயுதபாணி சக்திவேல் வாங்கும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை, 5 மணி அளவில் சூரசம்ஹாரம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து சமகால மூர்த்திக்கு சாந்தாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், பக்தர்கள் கங்கணம் களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. 19-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் விருந்தும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.